TRUE LIES KR IRS 30925

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Tue, 30 Sept 2025 at 07:36
Subject: Fwd: Tamilnadu (2) - Iniyavai paththu - Ten Good aspects
To:




*தமிழ்நாடு - இனியவை பத்து *

*சுஜாதா *

*தமிழ்நாட்டின் 'டாப்டென் மோசடிக'ளைப் பற்றி எழுதி இருந்தேன். "தமிழ்நாட்டில்
நல்லதே இல்லையா ...?" என்று கேட்கிறவர்களுக்கு 'டாப்டென் நல்லவைக'ளையும்
 சொல்ல விரும்புகிறேன். இதில் கிண்டல், பொடி எதுவும் கிடையாது - உண்மையாகவே
நல்லவை என நான் கருதுபவை . 'இன்னா  நாற்பது' எழுதினால் 'இனியவை நாற்பது'
எழுதும் தமிழ் இலக்கிய மரபில், இதோ 'நல்லன பத்து'.*

*10-வது இடத்தில் இருப்பது  - தமிழ்நாட்டின் சம சீதோஷ்ண நிலை. அதிக குளிர்
இல்லை. வெயிலும் வடநாட்டில் போல 44, 45-டிகிரிக்கெல்லாம் போகாது. அப்படி
அதிகரித்தால் மழையோ, தென்றலோ வந்து ஆறுதல் தரும். கோடைகாலத்தில்
மலைவாசஸ்தலங்களும் ஓரளவுக்கு குளிர் உள்ள நகரங்களும் உள்ளன. அவற்றுக்குச்
செல்ல மாநிலம் முழுவதும் வலைப் பின்னல்  போல சாலைகளும், தனியாரும் அரசும்
போட்டியிடும் பஸ் வசதியும் உள்ளது.*

*9-வது  இடத்தில் தமிழ் மொழி - என்னதான் அணங்கு, அன்னை என்று பண்டிதர்கள்
முயன்றாலும், தெய்வ பீடத்தில் ஏற மறுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக 'என்றுமுள
தென் தமிழா'க உயிருடன் இருக்கும் எளிய, சிறந்த நம் மொழி. சிக்கலான
கருத்துக்களையும் தெளிவாகச் சொல்ல ஏற்பட்ட அதன் இலக்கணம், சொற்சிக்கனம்...
இரண்டு லட்சம் வார்த்தைகளின் கருவூலம். (கணிப்பொறி யுகத்தில் இன்று தமிழ்
மொழியில்தான் வலைமனைகளும் இணைய இதழ்களும் அதிகம்.) இன்டர்நெட்டில் அகநானூறு
போன்ற பழசு வேண்டும் என்றால் பழசும் கிடைக்கிறது... அதே சமயம், மிகப் புதிதும்
உருவாகிறது. இரண்டாயிரம் வருட பழமை வாய்ந்தும் மரபுத் தொடர்ச்சியுள்ள ஒரே உலக
மொழி. 'எழுத் தெனப்படுவது அகர முதல் னகர இறுவாய் முப்பது' என்கிற தொல்காப்பிய
சூத்திரம் இன்றும் புரிவது. வாணிபம், பரஸ்பர உறவுகள், காதல் கதை, கட்டுரைகள்,
நகைச்சுவை, சச்சரவு, வட்டார வேறுபாடுகள், மேடை முழக்கம்... அத்தனைக்கும் ஈடு
கொடுக்கும் ஜீவ மொழி தமிழ். *

*8-வது இடத்தில் இருப்பது -  தமிழக விவசாயி. காவிரி நீர் திறந்துவிடாமல் அண்டை
மாநிலத்தார் கழுத்தறுத்தாலும் எப்படியோ தாளடி, குருவை, சம்பா என்று இருக்கிற
தரையடி நீரில் புராதன விவசாய முறைகளை வைத்துக்கொண்டு திறமையாகப் பயிரிட்டு
போதிய அளவுக்கு உணவு உற்பத்தி செய்து பஞ்சம் என்கிற வார்த்தையையே மறக்கச்
செய்தது. தமிழக விவசாயியிடம் டிராக்டர்களையும் ஹார்வெஸ்டர்களையும் கொடுத்தால்
சட்டென்று அவரால் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்கக்கூடிய சாத்தியம். இதன்
பின்னணியில் உள்ள கடும் உழைப்பு.*

*7-வது  இடத்தில் மற்ற மாநிலங்களில், வெட்டு குத்து, துப்பாக்கி கலாச்சாரம்
போன்றவை தாராளமாகப் பரவியிருக்கிறபோது, அவர்களுடன், ஏன்... உலகத்தில் பல
இடங்களுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் தின வாழ்க்கை பத்திரமானதாக இருப்பது.
பெரும்பாலான சமயங்களில் ஓரிரு சம்பவங்களைத் தவிர, அமைதி நிலவும் மாநிலமாக
இருப்பது. நான் அகர்த்தாலா, குவாஹாத்தி, கோஹிமா, ஸ்ரீநகர், கொழும்பு, சிகாகோ,
நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். எப்போதும்
காற்றில் ஒரு பயம்... மறைமுக எச்சரிக்கை இருக்கும். ஐந்து மணிக்கு கடையை
மூடிவிடும் மரண அமைதியும் பயமும் தமிழகத்தில் இல்லாமல் அதன் எல்லா நகரங்களும்
ஓரளவுக்குப் பத்திரமாக இருப்பது.*

*6-வது  இடத்தில் இருப்பது - புதிய பொருளாதாரக் கொள்கையையும் சென்னை போன்ற
துறைமுகங்களின் ஏற்றுமதி, இறக்குமதி சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டு
மாநிலத்தின் தொழில் முன்னேற்றம் ஏறுமுகமாக இருப்பது.  ஃபோர்டு, ஹூண்டாய், நியூ
ஹாலண்ட், அசோக் லேலண்ட், இந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் சேர்ந்து
முதலீடு செய்து கார், டிராக்டர், டிரக்  உற்பத்தியில் ஆசியாவிலேயே தலை சிறந்து
விளங்கப்போவதும், கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பிலும் முன்னேற்றம்
அடையப்போவதும் ஆரோக்கியமான விஷயங்கள். *

*5-வது இடத்தில் இருப்பது - தமிழக நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்க
பெரும்பான்மையினரிடம் எஞ்சியிருக்கும் மனிதாபிமானம். **உதவி செய்யும் ஆர்வம்.
மற்றவர் மேல் பரிவுள்ள எளிய மக்கள். பணக்காரர்களையும் மேல்தட்டு மக்களையும்
நீக்கிவிட்டாலும் அறுதிப் பெரும்பான்மையினரான மௌன மக்கள்தொகையினரிடம் நான்
காணும் இயல்பான நேச குணம். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் சந்தோஷம்
குறையாமல் இருப்பது. போதும் என்ற மனம். *

*4-வது  இடத்தில் இருப்பது - **நினைத்த மாத்திரத்தில் பஸ் பிடித்து சில நூறு
ரூபாய்க்குள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி சரித்திரத்தில் உலவ முடிவது. நம்
முன்னோர்களுடன் அவர்கள் விட்டுச்சென்ற கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும்
கோயில்களிலும் வாழ முடிவது. அழுத்தமான பக்தி மரபில் உருவான கோயில் சார்ந்த
கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் போன்ற நுண்கலைகள்... அதிலிருந்தும் மக்கள்
வாழ்விலிருந்தும் கிடைத்த கூத்தும் பாட்டும் நாட்டுப்புறக் கலைகளும்.*

*3**-வது  இடத்தில் - **இருப்பது, நம் அபார இலக்கியங்கள்... அவற்றை நாம்
படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு. 'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே' போன்ற வரிகளில் வெளிப்படும் தன்னம்பிக்கை. சிக்கலான
யாப்பு விதிகளின்படி எழுதப்பட்ட எளிமையான ஆயிரமாயிரம் இலக்கிய வரிகள். அந்த
யாப்பை மீறும் தைரியம் பெற்று கருத்தாழம் மிக்க புதுக்கவிதைகளைப் படைத்த
தீர்மானம். நாளைய சிந்தனையைக்கூட தெரிவிக்க அனுமதிக்கும் இதன் மகத்தான இலக்கிய
மரபு. பத்திரிகை படிக்கும் வழக்கம்... அதிலிருந்து எழுப்பப்படும்
ஆயிரக்கணக்கான வார்த்தை மாளிகைகள்.*

*2**-வது  இடத்தில் இருப்பது -** தமிழர்களின் தொழில்நுட்பத் திறமை. பணம்
படைத்த தொழிலதிபர்கள் அதிகமாக இல்லாவிடினும் இன்று இந்தியா முழுவதிலும் மேல்
நாட்டிலும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த படித்த தமிழர்கள், திறமையின்
அடிப்படையில் சிறந்து பணிபுரிவது. இந்தோ-திபெத் எல்லையில் ரோடு போடுவது,
பெங்களூரில் வீடு கட்டுவது, கலிஃபோர்னியாவில் சாஃட்வேர் எழுதுவது,
சிந்தசைஸரில் சீக்வென்சர் அமைப்பது, பாலங்கள் கட்டுவது... எதிலும் தமிழர்கள்
சளைத்தவர்கள் அல்லர். மதுரையிலும், திருநெல்வேலியிலும், சேலத்திலும்,
வேலூரிலும், காஞ்சியிலும் சாதாரண குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு உலகெங்கும்
பரவ வாய்ப்பு தரும் இந்த மாநிலம் தரும் கல்விச் சூழ்நிலையும், தமிழனின் ஆதார
புத்திசாலித்தனமும், எதையும் எளிதில் கற்கும் திறனும்.*

*முதல் இடத்தில் இருப்பது - **தேர்ந்தெடுப்பு இல்லையென்றாலும் தேர்தல்
வரும்போது கட்டாயமாக ஓட்டுப்போட்டு ஆட்சியை மாற்றுவது. ஜனநாயகத்தைக் குறை
சொல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் பாங்கு.
இரண்டும்கெட்டான் கூட்டணி வல்லடிகள் இல்லாமல் அரசாள்பவரைத் தீர்மானமாக
புரட்டிப்போடும் மக்கள் சக்தி. இதனால் ஊழலின் அளவு தேசிய சராசரியைவிட குறைவாக
இருப்பது. என்றாவது ஒரு நாள் தேச நலனைக் நேசிக்கும் உண்மையான தலைவர்கள்
முன்வருவார்கள் - வந்தால் தேர்ந்தெடுப்போம் என்று கொடுக்கும் நம்பிக்கை.*

*- Sujatha*
***********************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq0JuZTKteop71gDDxAEJwd2Qy%3D%2BV4VNp68DTj03igjvg%40mail.gmail.com.

Reply via email to