பிரதமர் மோடியை அழைத்துவந்து கோவை குருடம்பாளையத்தை காண்பியுங்கள்.

நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமரால் மட்டுமே முடியும்.

அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்துவந்து காண்பியுங்கள்.

தமிழ்நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழும் கோவை குருடம்பாளையம் கிராமம்!!!

“வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ
இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம்.
சாயங்காலம் சாணம் கிடைச்சிடும்."

கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது.
வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை.

‘ம்ம்மா...’ என்று குரல் கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள்.
சீருடை அணிந்த பெண்மணி மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னொருவர் சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார்.

மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன
ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்!

குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்!

அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே
கையாலும் மின்சாரத்தாலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன விதவிதமான இயந்திரங்கள்.

பெண்கள் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிட்டங்கியின் உள்ளே சென்று பார்த்தோம். ஊரின் மொத்தக் குப்பையும் அடுக்கி
வைக்கப்பட்டிருக்கிறது.

‘அட, குப்பைக் கிடங்கு’ என்றோம். உடனே, ‘குப்பைன்னு சொல்லக் கூடாதுங்க, தெனம்
100 பேருக்கு சோறு போடுது. மறுபயன்பாட்டுப் பொருள் அல்லது மாற்று ஆதாரப்
பொருள்னு சொல்லுங்க’ என்கிறார் திடக்கழிவு மேலாண்மை திட்ட உதவியாளர் கோபி.

அருகில் இருக்கும் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சீருடை மற்றும் கையுறை அணிந்த பெண்கள் கழிவுகளை தரம் பிரிக் கிறார்கள்.

பச்சைக் காய்கறி கழிவுகள், தேங்காய் ஓடுகள், தென்னை நார், காகிதம், பிளாஸ்டிக்
பொருட்கள், பயன்படுத்திய நாப்கின்கள்... இன்ன பிற பொருட்கள் பிரிக்கப்
படுகின்றன.

“மொத்தம் 230 பொருட்களுங்க. அவற்றில் 215 பொருட்களை மறுசுழற்றி செய் யலாம். 15
பொருட்களை மறுசுழற்சி செய்யவே முடியாதுங்க.

இங்க மட்டுமில்லை, உலகம் பூராவும் இதுதான்” என்கிறார்.

உண்மைதான், தெர்மோக்கோல், சூயிங்கம், கார்பன் பேப்பர், செராமிக் டைல்ஸ்,
சில்வர் சாக்லேட் பேப்பர், உட்பகுதியில் பளீர் வெண்மையில் இருக்கும் கோதுமை,
ஆட்டா மாவு உறைகள், ஆம்பர் சிரப் புட்டிகள் உட்பட 15 பொருட்களை மறு சுழற்சி
செய்ய முடியாது. அபாயக் குப்பைகள் அவை.

மாலையில் சாணம்... காலையில் பணம்!

“வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ
இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம்.

சாயங்காலம் சாணம் கிடைச்சிடும். ராத்திரி அதில் இருந்து இயற்கை எரிவாயு
உற்பத்தி யாகிடுமுங்க.

அதோ அந்த கேட்டரிங் சென்டர்ல மறுநாள் காலையில் 8 மணிக்கு சமையல் முடிச்சு
டிபன் சப்ளை செய்யறோம்.
கையோடு பணம் கிடைச்சிடுமுங்க.”

இயற்கை அறிவியலுடன் கூடிய கிராமப் பொருளாதாரத்தை எளிமையாக விளக்குகிறார்
இளைஞர் கோபி.

இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல
கிளைகளாக விரிகின்றன
மக்களுக்கான வாழ்வாதாரங்கள்.

நிலத்தடியில் ஆறு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு
தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது.

திருமணம், அலுவலகக் கூட்டங்கள், உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர்
குவிகிறது.

காலையில் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு
தயாராகிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

சோலார் குப்பை வண்டி
மணக்குது மண்புழு குளியல் நீர்!

இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்தில் இருந்து மிஞ்சும் மக்கிய சாணத்தை
காயவைத்து மண்புழுக்களுக்கு உணவாக போடுகிறார்கள்.

மண்புழுக்கள் செழித்து வளர்ந்துப் பெருகுகின்றன. ஒரு கிலோ மண்புழுக்களை
ரு.500-க்கு விற்பனை செய்கிறார்கள்.

மண்புழுக்கள் இடும் கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 கிலோ மண்புழு உரம்
உற்பத்தி செய்யப்படுகிறது.

அன்றைய தினமே விவசாயிகள் வந்து கிலோவுக்கு 20 ரூபாய் கொடுத்து அள்ளிச்
செல்கிறார்கள். இன்னொரு பக்கம் மண்புழுக்கள் குவிந்துள்ள தொட்டியின் அடியே
துளித்துளியாக சேகரமாகிறது மண்புழு குளியல் தண்ணீர்.

பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் இது. தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் பயிர்களுக்கு
தெளிக்கிறார்கள். பயிர்கள் பலமடங்கு செழித்து வளர்க்கின்றன. இதையும் போட்டி
போட்டு வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள்.

மாதத்துக்கு மண்புழு உரம் மற்றும் மக்கிய உரம் தலா 3 டன்கள் விற்பனையாகின்றன.

குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இரண்டு ஏக்கர் வளாகத்தில் கொசுவைப் பார்க்க
முடியவில்லை.

துர்நாற்றம் துளியும் இல்லை. மீன்கள், வாத்துக்கள், கோழிகள் கொசுக்களை
அழித்துவிடுகின்றன.

தென்னை நாரிலிருந்து உரம்
குருடம்பாளையம் படுசுத்தமாக இருக்கிறது.

தினசரி 27 நவீன சோலார் வாகனங்கள் 7 ஆயிரம் வீடுகளில் 2500 கிலோ குப்பைகளைச்
சேகரிக்கின்றன.

இவை தவிர மாநகராட்சி பகுதியான கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நகரத்து மக்கள்
போடும் குப்பைகளை தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று பேட்டரி வாகனத்தில்
சேகரித்துத் தருகிறது.

தரம் பிரிக்கப்பட்ட காகிதம், தென்னை நார், தேங்காய் ஓடு உள்ளிட்ட குப்பையில்
இருந்து தினசரி 100 கிலோ மக்கும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதனை கிலோவுக்கு 10 ரூபாய் கொடுத்து விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள்.
இன்னொரு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம்
நாற்றங்கால் பசுங்குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சந்தனம், பெருஞ்சந்தனம், வேங்கை, மூங்கில், கொன்றை, அரசு, நாவல், புங்கன்,
கருகமணி, பூச்சக்காய் மற்றும் பழ வகை மரக் கன்றுகள், மலர்ச் செடிகள்,
அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.

கிராமப் பஞ்சாயத்து நடத்தும் நர்சரி கார்டன் இது. அவ்வளவும் பணம். குப்பையில்
இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது பணம்!

ஆனா, இன்னைக்கு தமிழகத்தின் அரசு துறைகள்ல இவ்வளவு அலைச்சல் தேவையில் லீங்க.
நிறைய கணினிமயமாக்கிட்டாங்க. பெரும்பாலும் நேரில் செல்ல வேண்டாம். ரொம்ப
அவசியமுன்னா ரெண்டு தடவை போலாம்.

மத்தது எல்லாம் இணைய சேவையிலேயே வாங்கலாம். ஆதார் அட்டை வாங்கலாம். திருத்தம்
செய்யலாம்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.

இதை எல்லாம் எங்க கிராமத்து ஜனங்களுக்கு கத்துத் தர்றதுதான் இந்த வை-ஃபை
திட்டத் தின் நோக்கமுங்க.

அதுவுமில்லாம எங்க பஞ்சாயத்துக்குள்ள மட்டும் 7 ஆயிரம் மாண வர்கள் பள்ளி,
கல்லூரிகள்ல படிக்கிறாங்க. புராஜெக்ட் வேலை, பொது அறிவுன்னு இணைய வசதி
அவங்களுக்குத் தேவைப் படுது” கொங்குத் தமிழில் கணினி கற்பிக்கிறார் பஞ்சாயத்து
தலைவர் ரவி.

கலக்கப் போகுது காபி ஷாப்!

இணையம் மட்டுமல்ல... கிராமப் பஞ் சாயத்து சார்பில் அழகான காபி ஷாப் அமைக்கப்
பட்டுள்ளது. பசுமையான தோட்டத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு அழகிய மேஜைகள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனை அமைத்து முடித்தபோது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் நாம்
சென்ற நேரம் காபி அருந்த முடியவில்லை.

“அதனால என்னங்க நம்ம வீட்டுல ஜம்முன்னு காப்பித் தண்ணி குடிக்கலாமுங்க. நம்ம
கிராமத்துல இந்தத் தலைமுறை இளைஞர்கள் கோயமுத்தூர் நகரத்துக்குள்ள போய்
மால்கள்ல ஐஸ் காபி, பீட்ஸா, பர்கர் சாப்பிட்டு வர்றாங்க.

ஏன் நகரத்துலதான் காபி ஷாப் இருக்குணுமா? அதான் இங்கேயே கொண்டாந்துட்டோம்.
இங்கேயும் காபி கிடைக்கும். பனை வெல்லம் ஐஸ் காபி, பனை வெல்லம் சுக்குக்
காப்பி, அதிமதுரம் காபி, திப்பிலி காப்பி, சித்தரத்தைக் காபின்னு விதவிதமா
திட்டமிட்டுருக்கோமுங்க.

சிறுதானியங்கள்ல செய்யப்பட்ட பீட்ஸா, பர்கரு கிடைக்குமுங்க.

தேர்தல் முடிஞ்சு வந்துப் பாருங்க ஜோரா இருக்குமுங்க” உற்சாகமாகப் பேசுகிறார்
ரவி.

கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் 33 ஆயிரம் பேர். அனைவரின் அலைபேசி எண்க ளும்
கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தினமும் அதிகாலை அந்த எண்களுக்கு அழகுத் தமிழில் குறுந்தகவலாக வந்து
விழுகின்றன காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பொன்மொழிகள். கிராம சபைக்
கூட்டம்,

போலியோ சொட்டு மருந்து முகாம், மருத்துவ முகாம், ஆதார் அட்டை சிறப்பு முகாம்,
வாக்காளர் அட்டை சிறப்பு முகாம், கோயில் திருவிழா, குப்பை வண்டி வரும் நேரம்,

கோவை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலைத் தகவல்கள் ஆகியவை
குறுந்தகவல்களாக அனுப்பப்படுகின்றன.

குறிப்பாக யானைகள் வரும் தகவல். குருடி மலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால்
வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும்.

அப்படி வராமல் இருக்க மலை மீது வனத்துக்குள்ளேயே மூன்று இடங்களில் பஞ்சாயத்து
சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியும் மீறி யானைகள்
ஊர் எல்லையை நெருங்கினால் உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்
அனுப்பப்படுகிறது.

கிராமத்துக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் நான்கு ஆரம்பப் பள்ளிகள்
இருக்கின்றன. அத்தனையும் அசத்தல் ரகம். குறிப்பாக, தொப்பம்பட்டி அரசு
நடுநிலைப் பள்ளி சுகாதாரத்தில் ஜொலிக்கிறது.

பஞ்சாயத்து சார்பில் அழகிய வண்ணங்களில் பள்ளிக்கு பெயிண்ட் அடித்து சுத்தமாக
வைத்திருக்கிறார்கள். உயரமான சுற்றுச்சுவரை கட்டி அதன் மீது வேலி
போடப்பட்டுள்ளது. கணனிகள் வாங்கித் தரப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் டைல்ஸ் போடப்பட்டு பளிச் என்று இருக்கின்றன. பள்ளியின் மேல்
நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைந்தால் அல்லது நிறைந்தால் தானாக
இயங்குகிறது தானியங்கி மோட்டார்.

ஏழை மாணவர்களுக்கு தனியாரிடம் ஸ்பான்சர் வாங்கி விளையாட்டுத் துறைகளில்
சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதோ இன்னும் இரண்டொரு நாட்களில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துக்கொள்ள
தாய்லாந்து செல்லவிருக்கிறார் இந்த ஊர் மாணவர் நித்திரன்.
ஜொலிக்குது சோலார்!

இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகள் மின் வாரியத்துக்கு
கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்திருக்கின்றன.

மின்வாரியத்துக்கு பெரும் சுமை இது. ஆனால், பைசா பாக்கியில்லாமல் மின் கட்டணம்
கட்டியதுடன், கோவை மாநகராட்சிக்கு சாலை விளக்குகள் அமைத்துக்
கொடுத்திருக்கிறது குருடம்பாளையம் பஞ்சாயத்து.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 128 சோலார் மின் விளக்குகள் பொன்மொழி
வாசகங்களுடன் ஜொலிக்கின்றன.

கிராமத்துக்குள் 200 சோலார் தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. இதன் மூலம் மாதம்
மூன்று லட்சம் ரூபாய் சேமிக்கிறார்கள்.

கிராமத்துக்குள் திறந்தவெளி சாக்கடை கிடையாது. அதனால் கொசுக்களும் கிடையாது.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகரங்களே திணறும்போது பஞ்சாயத்துக்குள்
மினி பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி
நீங்கலான கழிவு நீர் அதில் வெளியேற்றப்படுகிறது.

அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல்,
கரித்துண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம்
அமைக்கப்பட்டு மிகப் பெரிய குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது.

பாதாள சாக்கடைத் திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும்
நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் இது!

குருடம்பாளையம் அதி நவீன கிராமம் மட்டுமல்ல... ஒரு எடுத்துக்காட்டு.

இச்செய்தி பலதரப்பினருக்கும் சென்றடையவேண்டும் என்கின்ற வேட்கையில்
பகிர்ந்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

தேவையற்ற வேலைகளிலும், உபயோகமற்ற செயல்களிலும், ஆரப்பாட்டம், போராட்டம்
ஆகியவற்றைத தவிர்த்து ஒரு அற்புதமான மௌனப் புரட்சியே செய்து வெற்றியும் கண்ட

கோவை மாவட்டம், குருடம்பாளைய கிராம சபைத் தலைவர் இரவி அவர்கள், திடக்கழிவு
மேலாண்மைத் திட்ட வல்லுநர் வேலூர் சீனிவாசன், குருடம்பாளையம் ஊராட்சி
திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் இளைஞர் கோபி ஆகிய உதாரண புருசர்களுக்கு எனது
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.

இதுவன்றோ வளர்ச்சி! இதுவன்றோ புரட்சி! மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால்
அற்புதமாகப் பாடியிருந்திருப்பார்.

இதுவே ஒரு திரைப்படத்தில் வந்திருப்பின் வரிவிலக்கு அவார்டு, விழா என்று
ஆரவாரம் விண்ணை முட்டும். போலிக்குத் தரும் அங்கீகாரம் முற்றிலும் ஒழிந்து,
உண்மைக்கும் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மரியாதை கொடுக்கும் சமுதாயமாக நாம்
மாற பிள்ளையார் சுழி போட்ட குருடம்பாளையம் மக்களுக்கும், பெண்களுக்கும்
கோடானுகோடி நன்றிகள்.

இந்த ஊர் உண்மையில் உலகிற்கே ஒரு வழிகாட்டும்பாளையம்! குருடம்பாளையமன்று.
இக்கிராம மக்களைப் பார்த்தும் முயற்சி எடுக்காத நாமே குருடர்கள்.

"நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேடபது எதற்கு? நீயென்ன செய்தாய்
அதற்கு என்று கேட்டால் நன்மை உனக்கு! நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன
புரிந்தேன்."

பழைய எம். ஜி. ஆர். பாடல் மனதில் இழையோடுகின்றது!

நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கும் இந்த ஊர்மக்களே மகாத்மா காந்தி கண்ட கிராம
இராஜ்ஜியம் நடத்துபவர்கள்.

எந்த ஊடகமும் வேண்டாம். நமக்கு நாமே ஊடகமாவோம். கதிரவன் போல எங்கும் பரவுவோம்
செயல்படுவோம்.

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாதமா.
பிளாஸ்டிக் கழிவுகளால் சாலைகள் அமைத்த இக்கிராமத்தினரே உண்மையில் நமது
நாட்டின் உயிர்நாடி.

கர்மவீரர் காமராஜர் இன்று இருந்திருப்பாரேயானால் இந்நேரம் தமிழகமெங்கும் இந்தத
திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திருந்திருப்பார்..

சுந்தர்ஜி

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds2EqXVWo2dMqMZcjpH3-ZyBho0qmqOm3UBfUrRJW6BAw%40mail.gmail.com.

Reply via email to